Shivapuranam (Tamil)


(திருவாசகம்)

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
சிவபுராணம் 
திருச்சிற்றம்பலம் 

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்!
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க!
ஆகம மாகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க! (5)

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க!
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க!
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! (10)

ஈசனடி போற்றி! எந்தையடி போற்றி!
தேசனடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!(15)

ஆராத இன்பம் அருளு மலைப்போற்றி!
சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய ஒரைப்பன்யான் (20)



கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய்! விளங்கொளியாய்!
எண்ணிறந் தெல்லை யிலாதானே! நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்(25)

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லரசு ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா அ நின்றஇத் தாவர சங்கமத்துள் (30)

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்!
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா! விடைப்பாகா! வேதங்கள்
ஐயா! எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே!(35)

வெய்யாய்! தணியாய்! இயமான னாம்விமலா!
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே! (40)

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே! (45)

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்!
நிறங்க ளோர் ஐந்துடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான்! வல்வினையேன் தன்னை (50)

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய (55)

விலங்கு மனத்தால் விமலா! உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60)

தாயிற் சிறந்த தயவான தத்துவனே!
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே! தேனார் அமுதே! சிவபுரனே!
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே!
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் (65)

பேராது நின்ற பெருங்கருணைப்  பேராறே!
ஆரா அமுதே! அளவிலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே! (70)

அன்பருக்கு அன்பனே! யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே! துன்னிருளே! தோன்றாப் பெருமையனே
ஆதியனே! அந்தம் நடுவாகி அல்லானே!
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் (75)

நோக்கரிய நோக்கே! நுணுக்கரிய நுண்ணுணர்வே!
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே!
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே!
ஆற்றின்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80)

மாற்றமாம் வையகத்தின்  வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணாரமுதே! உடையானே!
வேற்று விகார விடக்குடம்பி நுட்கிடப்ப
ஆற்றேன் எம்ஐயா! அரனேயோ! என்றென்று (85)

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே!
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே!
தில்லையுட் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே! (90)

அல்லற் பிறவி அறுப்பானே! ஓவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)

ஓம்

5 comments:

  1. midushan2010@gmail.com.pls send me all pdf file

    ReplyDelete
    Replies
    1. Namaskaram,

      I don't have all the PDFs with me. If there's any specific sloka(s) you are looking for, please let me know.

      Hari Aum
      Nandini

      Delete
  2. Do you have Acho pathigam from Thiruvasagam. If so can you please mail to loganathan28@gmail.com

    ReplyDelete
    Replies
    1. No Karthick. I do not have that with me, but if I come across that sloka somewhere, it shall be shared with you. Sorry about that.

      Hari Aum!
      Nandini

      Delete
    2. You can check out in shaivam.org. They have Thiruvachagam section. I am sure they would have it. Hope this helps.

      Hari Aum!

      Delete

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.