ஸ்ரீ ஸரஸ்வதி துதி (Sri Saraswati Thuthi)


தேவி ஜகன்மாதா ஜய ஜய தேவி ஜகன்மாதா ஜய ஜய
தேவி ஜகன்மாதா ஜய ஜய தேவி ஜகன்மாதா ஜய ஜய

பொன் இளம் காலையிலே மென் பூமணம்
பொங்கும் நன் நேரத்திலே - பல
வண்ணப் பறவைகளும் பொற் ஜோதியை
வாழ்த்திடும் போதினிலே - நான்
என்னை மறந்திருந்தேன் - இயற்கையின்
இன்பத்தில் ஆழ்ந்திருந்தேன் - எழில்
அன்னத்தில் ஏறி வந்தாள் - ஸரஸ்வதி
ஆனந்த ரூபிணியே (தேவி ஜகன்மாதா)

பக்தி வளர்ந்து விட்டால் - மனதில்
பற்று ஒன்றிருந்திடுமோ - ஆத்ம 
சக்தி உணர்ந்து விட்டால் - அகத்தே
தாழ்வு தலைப் படுமோ - மோக்ஷ
சித்தி கொடுத்தாலும் - கோடிகோடி
ஜன்மம் எடுத்தாலும் - இந்த
உத்தமர் கூட்டத்திலே பாடும் வரம்
ஒன்றுற வேண்டும் அம்மா (தேவி ஜகன்மாதா)

ஸன்னிதியோ ஜகமாம் - ஏற்றும் தீபம்
சந்திர சூரியராம் - வாயு
மன்னிய சாமரமாம் - வயங்கிய
வானம் விமானமுமாம் - ஆடும்
இன்னறு நீர்க்கடலாம் - சராசரம்
யாவும் நிவேதனமாம் - எங்கும்
புன்னகை செய்பவளே - எக்காலமும்
போற்றும் வரம் தருவாய் (தேவி ஜகன்மாதா)