மாங்காடு காமாக்ஷி ஆறுவாரத் துதிப்பாடல்கள்
முதல் வாரப்பாடல்
அனாதை நான்... ஆதரிப்பாய் அம்மா !
அகிலாண்டநாயகியே..! ஆதி பராசக்தி நீயே... (அனாதை)
கவலை தீர்க்கும் கற்பகமாய் காஞ்சியிலே விளங்குகின்றாய்
காலமெல்லாம் நலம் பெறவே காசியிலே வீற்றிருப்பாய்!
மானிடர்க்கு வாழ்வளிக்க மதுரையிலே அமர்ந்திருப்பாய் - நம்
மனக்குறையைத் தீர்ப்பதற்கே மாங்காட்டில் வடிவெடுத்தாய் (அனாதை)
ஆறுவாரம் தொடர்ந்து வந்து வணங்கிடுவேன் உன்னையம்மா -
அருள்மாரி பொழிந்திடுவாய் அகத்தினிலே நிறைந்திடுவாய்...!
என்குறையை நீயறிவாய் என்துயரம் நீ உணர்வாய்!
உன்பதமே என்னிதயம் எந்நாளும் நினைக்கச் செய்வாய் (அனாதை)
தாயுமுண்டு தந்தையுண்டு பந்தமுண்டு பாசமுண்டு
யாரிருந்தும் என்னப்பயன் தாயே உன் அருளிலையேல்...
சேயாக ஏற்றிடுவாய் சேவடி வணங்குகின்றேன்!
தாய் சேயை அணைப்பதுபோல் அரவணைத்துக் காத்திடுவாய் (அனாதை)
