நவக்கிரக போற்றி ஸ்தோத்திரம்


நவக்கிரக போற்றி ஸ்தோத்திரம்

சூரிய பகவான் 
(கிரக க்ஷேத்திரம்: சூரியனார் கோவில்    
கிரக மூர்த்தி: ஸ்ரீ சிவசூரிய நாராயண ஸ்வாமி)

உலகத்தின் இருளைப் போக்கி ஒளியினை வழங்கும் தேவே
பலருமே தொழுது போற்றும் பகலவா அருள் வழங்க
குலவிடும் வாசித் தேரில் குதிரைகள் ஏழு பூட்டி
உலாவரும் ஆதவா நின் உயர்கழல் போற்றி போற்றி

சந்திர பகவான்
(கிரக க்ஷேத்திரம்: திருப்பதி     கிரக மூர்த்தி: ஸ்ரீ வெங்கடேச பெருமாள்)

பாற்கடல் கடைந்த போது பட்டொளி கதுவத் தோன்றி
போற்றுவோர் தொழவேநிற்கும் பொன்மய ஸோம தேவா
ஏற்றமும் உடையகோவே இமகிரி வலமாய் வந்து
தோற்றமே நல்கும் ஸோம தேவனே போற்றி போற்றி

அங்காரக பகவான்
(கிரக க்ஷேத்திரம்: பழனி    கிரக மூர்த்தி: ஸ்ரீ தண்டாயுதபாணி)

சொல்லுக்கு வலிமை நல்கி தைரியம் ஆண்மை வீரம்
நல்லவை அனைத்தும் நல்கி நலிவெலாம் போக்கி வைக்கும்
வல்லதோர் சக்திகையில் வைத்துமே அருள் வழங்கும்
அல்லல்கள் தமை அகற்றும் அங்காரக போற்றி போற்றி

புத பகவான்
(கிரக க்ஷேத்திரம்: மதுரை    கிரக மூர்த்தி: ஸ்ரீ சொக்கநாதர்)

திங்களின் சுதனாம் தேவா சுகமெலாம் வழங்கும் நேயா
தங்கிடும் ஞானம், விஞ்சை தமர்களுக் கருளும்
எங்கிலும் சாந்தம் கொண்டு ஈடில்லா புலவனான
மங்கள புதனாம் தேவன் மலரடி போற்றி போற்றி

குரு பகவான்
(கிரக க்ஷேத்திரம்: திருச்செந்தூர்    கிரக மூர்த்தி: ஸ்ரீ பாலசுப்ரமணியர்)

வேதநூல் தர்ம சாஸ்திரம் மேன்மையை அறிந்தோனாகி
சாதனையால் கற்பகத் தனிநாட்டின் இறைவனாகி
ஜோதியாய் குருவுமாகி சொர்கத்தை மண்ணில் நல்கும்
ஆதியாம் குருவே நின்தாள் அடைக்கலம் போற்றி போற்றி.

சுக்ர பகவான்
(கிரக க்ஷேத்திரம்: ஸ்ரீரங்கம்    கிரக மூர்த்தி: ஸ்ரீ ரங்கநாதர்)

பிருகுவின்போ சுதனே யானான் பேரரக்கரின் குருவாய் மண்ணில்
தருகின்ற மழையுமாகி அதைத் தடுப்பவன் தானே யாகி
கருவென விளங்கும் சாத்திரம் கற்றவன் தானுமான
பெரியவன் சுக்ராச்சாரி பொன்னடி போற்றி போற்றி.

சனி பகவான்
(கிரக க்ஷேத்திரம்: திருநள்ளாறு    கிரக மூர்த்தி: சனிபகவான்)

வள்ளலாய் கொடுமை செய்யும் மன்னனாய் எவர்க்கும் செல்வம்
அள்ளியே கொடுப்போனாகி அனைவரும் துதிக்க நின்று
தெள்ளிய தேவர் மூவர் தெளிந்திட நடுங்க வைக்கும்
கள்ளமில் சனிச்சரண் கழல்களே போற்றி போற்றி.

ராகு பகவான்
(கிரக க்ஷேத்திரம்: திருக்காளஹஸ்தி    கிரக மூர்த்தி: ஸ்ரீ காளஹஸ்தீச்வரர்)

அமுதத்திற்காகத் தன் சிரம் அற்றவன் ஆனபோதும்
விமலனால் வரமும் பெற்று வியத்தகு பலமும் பெற்று
வெம்மைசேர் கதிரோன் திங்கள் வெருண்டிடச் செய்யவல்ல
செம்மைசேர் ராகுதேவன் திருக்கழல் போற்றி போற்றி.

கேது பகவான்
(கிரக க்ஷேத்திரம்: திருக்காளஹஸ்தி    கிரக மூர்த்தி: ஸ்ரீ காளஹஸ்தீச்வரர்)


வானவர் நடுவில் நின்று வார்கடல் அமுதமுண்டு
தான்சிரம் அற்றபோதும் தனிச்சிரம் உடைய கேது
வானமீன் தன்னில் தனிவளர் அரசு ஆன தேவன்
தேன் கமழ் கேது தேவன் திருக்கழல் போற்றி போற்றி.

Bhagavad Gita

Bhagavad Gita